PBTSELANGOR

கைவிடப்பட்ட 782 வாகனங்களை ஷா ஆலம் மாநகர் மன்றம் அகற்றியது

ஷா ஆலம், நவ 16- இவ்வாண்டு  ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் சாலையோரங்களில் கைவிடப்பட்ட 782 வாகனங்களை ஷா ஆலம் மாநகர் 
மன்றம் அகற்றியது.

இக் காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் வாயிலாக இந்த வாகனங்கள் அகற்றப்பட்டதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

இழுவை வாகனங்கள் மூலம்  அகற்றப்பட்ட அந்த கைவிடப்பட்ட  வாகனங்கள் செக்சன் யு16, செக்சன் 17, மற்றும் செக்சன் 31 ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள கிடங்குகளில் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான கட்டணமாக நாளொன்றுக்கு பத்து வெள்ளி வசூலிக்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

பொதுமக்களுக்கு ஆபத்தும் வாகனமோட்டிகளுக்கு இடையூறும் ஏற்படுவதை 
தடுப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

கைவிடப்பட்ட வாகனங்களில் நீர் தேங்கி ஏடிஸ் கொசுக்கள் பரவக்கூடிய வாய்ப்பு 
ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் வாகனங்களை கண்ட 
இடங்களில் கைவிட வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.

Pengarang :