NATIONALPBTSELANGOR

சிலாங்கூரில் 800,000 பேர் இலக்கவியல் துறைக்கு இன்னும் தயாராகவில்லை

ஷா ஆலம், நவ 16- சிலாங்கூர் மாநிலத்தில் வசிப்போரில் சுமார் எட்டு லட்சம் பேர் 
இலக்கவியல் சூழலுக்கு இன்னும் தங்களை தயார் படுத்திக் கொள்ளவில்லை.

முதியோர், சிறு வணிகர்கள், பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் 
இளைஞர்கள் ஆகிய தரப்பினரே இலக்கவியல் துறைக்கு இன்னும் தயாராகவில்லை 
என்று எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் இலக்கவியல் பிரிவுத் தலைவர்
கமாருள் நிசாம் காசிம் கூறினார்.

மலேசியர்களில் 12.6 விழுக்காட்டினர் இணையத்தை பயன்படுத்தவில்லை என்பது தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 
இதன் அடிப்படையில் பார்த்தால் சிலாங்கூரில் சுமார் 831,000 பேர் இணைய ஆற்றலை பெறாமல் உள்ளனர் என்றார் அவர்.

இத்தகைய தரப்பினரை இலக்காக கொண்டு உரிய பயிற்சிகளை வழங்குவதற்காக 
ஆயிரம் இலக்கவியல் பங்காளிகளை தாங்கள் தேர்வு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 சம்பவங்களுக்கு பிந்தைய புதிய இயல்பு வாழ்க்கைக்கு சமுதாயத்தை 
தயார் படுத்தும் வகையில் இலக்கவியல் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் 
முயற்சியில் எம்.பி.ஐ. தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இலக்கவியலின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்துவதில்  மக்கள் 
பிரதிநிதிகள் முக்கிய பங்கினை ஆற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முதியோர், சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், பி40 தரப்பினருக்கு 
ஆகியோரின் வாழ்க்கை தர மேம்பாட்டை உறுதி செய்வதற்காக மாநில அரசு 
அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 30 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

Pengarang :