ECONOMYNATIONALSELANGOR

சாலை நிர்மாணிப்புப் பகுதியில் நீர் திருட்டு- ஸ்பான் அதிரடி நடவடிக்கை

பந்திங், நவ 18- சாலை நிர்மாணிப்பு பகுதி ஒன்றில் ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையமும் ஆயர் சிலாங்கூர் நிறுவனமும் மேற்கொண்ட அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக இணைப்பை ஏற்படுத்தி நீரை திருடிய சம்பவம் அம்பலத்திற்கு வந்தது.

இந்த நீர் திருட்டுச் சம்பவம் கடந்த ஜனவரி மாதம் முதல் நிகழ்ந்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்ததாக ஸ்பான் ஆணையத்தின்  தொடர்பு மற்றும் பயனீட்டாளர் விவகாரப் பிரிவுக்கான முதன்மை அதிகாரி லோ பிட் மூய் கூறினார்.

பந்திங் பகுதியில் சாலை நிர்மாணிப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவன ஊழியர்களின் பயனீட்டிற்காக இந்த நீர் பயன்படுத்தப்பட்டு வந்ததாக அவர் சொன்னார்.

அங்குள்ள சிறு விவசாய நிலத்திற்குச் செல்லும் குழாயின் மீட்டர் பகுதியிலிருந்து இணைப்பு ஏற்படுத்தப்பட்டு கட்டுமானத் தொழிலாளர்களின் குடியிருப்பில் உள்ள டாங்கி ஒன்றுக்கு நீர் விநியோகிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அந்த டாங்கியில் உள்ள நீர் சுத்திகரிக்கப்பட்டது என்பதோடு அப்பகுதியில் மீட்டரும் பொறுத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.

பந்திங், சுங்கை மங்கிஸ் பகுதியிலுள்ள அந்த கட்டுமானத் தொழிலாளர்கள் குடியிருப்பில் திடீர் சோதனை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த சட்டவிரோத நீர் இணைப்பினால் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திற்கு 80,000 வெள்ளி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :