EVENTSELANGORTOURISM

சுற்றுலாத் துறையினருக்கு 1,000 வெள்ளி உதவித் தொகை- சிலாங்கூர் அரசுக்கு சங்கத் தலைவர் பெருமாள் நன்றி

ஷா ஆலம், நவ 21- சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு வழங்க முன்வந்துள்ள ஆயிரம் வெள்ளி உதவித் தொகை கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய நெருக்கடியிலிருந்து மீள அத்தரப்பினருக்கு ஓரளவு உதவி புரியும்.

கடந்த மார்ச் மாதம் முதல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சுற்றுலாத் துறையில் தொடர்ந்து தாக்குப் பிடிக்க இந்த சிறப்புத் தொகை உதவி புரியும் என்று சிலாங்கூர் மாநில சுற்றுலா பேருந்து ஓட்டுநர் சங்கத்தின் தலைவர் எம்.பெருமாள் நம்பிக்கைத் தெரிவித்தார்.

கோவிட்- பெருந்தொற்று பரவல் காரணமாக சிலாங்கூர் மட்டுமின்றி நாடு முழுவதும் சுற்றுலாத் துறை ஏறக்குறைய முற்றிலுமாக முடங்கி விட்டதாக அவர் சொன்னார்.

மாநில அரசு வழங்கியுள்ள இந்த உதவித் தொகை எங்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளதோடு சவால்மிக்க இக்காலக்கட்டத்தை சமாளிப்பதற்கும் உதவியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு மாநில அரசு தொடர்ந்து உதவி வழங்கி வரும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக கோல சிலாங்கூர் சமூக உபசரிப்பாளர்  பிரதிநிதி அப்சால் அசாரி கூறினார்.

சுற்றுலாத் துறை அடுத்தாண்டில் மீண்டும் உத்வேகம் பெறுவதற்கு ஏதுவாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இனியும் தொடரப்படாது என நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.


Pengarang :