ECONOMYPENDIDIKANSELANGORYB ACTIVITIES

சிலாங்கூரில் 740 பள்ளிகளுக்கு 2 கோடி வெள்ளி மானியம்- 83 தமிழ்ப்பள்ளிகள் வெ.43.6 லட்சம் பெற்றன

ஷா ஆலம், நவ 24- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 740 பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு இவ்வாண்டில் 2 கோடியே 24 லட்சத்து 73 ஆயிரம் வெள்ளி மானியமாக வழங்கப்படுகிறது.

இந்த மானியம் இம்மாதம் 2ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பள்ளி மண்டபங்களைப் பராமரிப்பது, தளவாடப் பொருள்களை வாங்குவது மற்றும் இதர தேவைகளை ஈடுசெய்வது போன்ற நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

மாநிலத்திலுள்ள 538 சமயப் பள்ளிகளுக்கு 91 லட்சத்து 13ஆயிரம் வெள்ளியும் 101 சீன ஆரம்ப பள்ளிகளுக்கு 60 லட்சம் வெள்ளியும் 4 தனியார் சீன இடைநிலைப்பள்ளிகளுக்கு 20 லட்சம் வெள்ளியும் மானியமாக வழங்கப்படுகிறது.

இது தவிர 83 தமிழ்ப்பள்ளிகள் 43 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியும் 14 முபாலிக் பள்ளிகளும் ஒரு  தேசிய இடைநிலைப்பள்ளியும்  பத்து லட்சம் வெள்ளியும் பெறுகின்றன என்று மந்திரி புசார் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மாணவர்கள் சிறப்பான முறையில் கல்வி கற்பதற்குரிய உகந்த சூழலை உருவாக்குவதற்கு இந்த மானியம் உதவும் எனத் தாம் நம்புவதாக அவ சொன்னார்.

 


Pengarang :