ECONOMYNATIONALPBTSELANGOR

நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டங் கட்டமாக வழக்க நிலைக்கு திரும்பும்- ஆயர் சிலாங்கூர் அறிவிப்பு

ஷா ஆலம், டிச 8– நான்கு நீர் சுத்திகரிப்பு மையங்கள் மூடப்பட்டதால் குடிநீர் விநியோகத் தடை ஏற்பட்ட ஏழு வட்டாரங்களில் நீர் விநியோகம் கட்டங் கட்டமாக வழக்க நிலைக்கு திரும்பும்.

பாதிக்கப்பட்ட கோலாலம்பூர், பெட்டாலிங், ஷா ஆலம்-கிள்ளான், கோம்பாக், கோல லங்காட், உலு சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் நீர் பகிர்ந்தளிப்பு முறையை நிலைப்படுத்தும் நடவடிக்கை துரித கதியில் மேற்கொள்ளப்படுவதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

நீர் பகிர்ந்தளிப்பு முறை நிலைத்தன்மையற்றதாக உள்ளது. வீடமைப்பு பகுதிகளில் உள்ள பல நீர் சேகரிப்பு டாங்கிகளில் நீர் வெகுவாக குறைந்து வருவதோடு நீர் அழுத்தமும் குறைந்து காணப்படுகிறது என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தொடர்பு மற்றும் வர்த்தக பிரிவுத் தலைவர் எலினா பாஸ்ரி கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் இன்று மாலை 3.00 மணி தொடங்கி நீர் விநியோகத்தை கட்டங் கட்டமாக பெறத் தொடங்குவர் என்று அவர் மேலும் சொன்னார்.

பாதிக்கப்பட்ட 861 பகுதிகளில் லோரிகள் வாயிலாக நீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இடங்களான மருத்துவமனைகள் மற்றும் டயாசிலிஸ் மையங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர்  குறிப்பிட்டார்.

சுங்கை சிலாங்கூரில் நேற்று இரவு நீர் மாசுபாடு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரந்தாவ் பாஞ்சாங் மற்றும் சுங்கை சிலாங்கூர் 1,2 மற்றும் 3ஆம்  கட்ட நீர் சுத்திகரிப்பு மையங்கள் மூடப்பட்டன.


Pengarang :