ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

கிள்ளான் ஆற்று நீரின் தரம் மேம்படுகிறது- பயனீட்டுத் தேவைக்கு உபயோகிக்கும் சாத்தியம் அதிகரிப்பு

ஷா ஆலம், டிச 25– கிள்ளான் ஆற்றின் தரம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. அந்த ஆற்று நீரை குடிநீர் தேவைக்குப் பயன்படுத்தும் மாநில அரசின் கனவு இதன் வழி நனவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட சிலாங்கூர் கடல் நுழைவாயில் திட்டத்தின் வழி மேற்கொள்ளப்பட்ட ஆற்றை சுத்தப்படுத்தும் மற்றும்  மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகள் நீரின் இயற்கைச் சூழலை மீட்டெடுக்க உதவியுள்ளதாக அடிப்படை வசதிகள் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

ஆற்றை சுத்தப்படுத்தி மறுசீரமைப்பு செய்யும் பணிகள் காரணமாக நீரின் தரம் வெகுவாக மேம்பட்டுள்ளது. மாநிலத்தின் புதிய நீர் தேவைக்கான ஆதாரமாக கிள்ளான் ஆற்றை பயன்படுத்தும் நோக்கம் நிறைவேறுவதற்கான சாத்தியமும் அதிகரித்துள்ளது என்றார் அவர்.

ஆற்றை அழகுபடுத்தும் திட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதோடு ஆற்றோரங்களை மேம்படுத்தும் பணியிலும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன என்று அவர் மேலும் சொன்னார்.

கிள்ளான் ஆற்றுப் பகுதியில் தொடர்பு ஒருங்கமைப்பை உருவாக்குவது தொடர்பில் லண்டாசான் லுமாயான்  மற்றும் சுங்கை கிள்ளான் லிங்க் நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கிள்ளான் ஆற்றின் தரம் மத்திம நிலையில் உள்ளதாகவும் இதன் வழி நீர் விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகவும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஆகஸ்டு மாதம் கூறியிருந்தார்.

இந்த ஆற்று நீரை சுத்திகரிக்கப்பட்ட நீராக மாற்றுவதற்கு இந்த தரம் போதுமானதாக உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், எனினும், அதற்கு அதிக செலவு பிடிக்கும் என்றார்.

 


Pengarang :