ECONOMYNATIONALSELANGOR

வேலையிட விபத்துகளைத் தடுக்க விதிமுறைகளை முறையாக பின்பற்றுவீர்- குத்தகையாளர்களுக்கு அறிவுறுத்து

கோலாலம்பூர், டிச 26– நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டிருந்தால் இங்குள்ள பந்தாய் டாலாம் கழிவு நீர் குளத்தில் நச்சு வாயு பரவல் காரணமாக மூவர் உயிரிழக்கும் சம்பவம் நிகழ்ந்திருக்காது என்று இக்கத்தான் எனப்படும் சமூக பாதுகாப்பு ஒருங்கமைப்பின் தலைவர்  டான்ஸ்ரீ லீ லாம் தை கூறினார்.

வேலையிட விபத்துக்களால் ஏற்படும் மரண எண்ணிக்கை சாலை விபத்துக்கள் அளவுக்கு அதிகமாக இல்லாத போதிலும் அண்மைய காலமாக பணியிட விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதாக அவர் சொன்னார்.

கழிவுக் நீர் குளங்கள் போன்ற மூடப்பட்ட இடங்களில் வேலை செய்யும் தங்கள் தொழிலாளர்கள் முறையான சான்றிதழ்களையும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளையும் பெற்றுள்ளதை முதலாளிகளும் குத்தகையாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆபத்து நிறைந்த வேலைகளைச் செய்யும் தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வும் வேலைத் திறனும் அதிகரிப்பதற்கு இத்தகைய நடவடிக்கைகள் பெரிதும் துணை புரியும். மேலும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் நிகழ்வதையும் தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

ஆபத்து நிறைந்த இடங்களில் பணிகளை மேற்கொள்ளும் போது விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வதில் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார இலாகா மேலும் ஆக்க கரமான பங்கை ஆற்றும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர்  குறிப்பிட்டார்.

விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதை தடுப்பதற்கு ஏதுவாக முற்றிலும் மூடப்பட்ட பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்படும் போது பாதுகாப்பு அம்சங்களை கண்காணிக்க மேலாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் பந்தாய் டாலாம், ஜாலான் பந்தாய் பெர்மாய் 1இல் உள்ள கழிவு நீர் குளத்தில் பராமரிப்பு பணியை மேற்கொண்டிருந்த போது ஏற்பட்ட நச்சு வாயு கசிவினால் குத்தகையாளர் மோகனராஜா மற்றும் அவரின் புதல்வர் குமரகுரு, இந்தோனேசிய தொழிலாளி ஆகிய மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


Pengarang :