ECONOMYNATIONALSELANGOR

கோவிட்-19 குறித்து சுகாதாரப் பணியாளர்களிடம் பொய்யுரைக்காதீர்- டாக்டர் நோர் ஹஷாம் வேண்டுகோள்

ஷா ஆலம், டிச 27– கோவிட்-19 சோதனைக்காக அல்லது சிகிச்சைக்காக வரும் போது தங்கள் உடல் நிலை குறித்த உண்மை நிலையை சுகாதாரப் பணியாளர்களிடம் மறைக்க வேண்டாம் என பொதுமக்களை சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்களப் பணியாளர்களிடம் பொய்யுரைக்காதீர்கள். நாங்களும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்தான். எங்களுக்கும் குடும்பமும் உறவுகளும் உண்டு. எங்களுக்கு துரோகமிழைக்காதீர்கள் என சமூக ஊடகம் வாயிலாக அவர் இந்த உருக்கமான வேண்டுகோளை விடுத்தார்.

மருத்துவச் சோதனையின் போது நோயாளி ஒருவர் பொய்யுரைத்த காரணத்தால் சுகாதாரப் பணியாளர் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்காக நேர்ந்ததாக மருத்துவர் ஒருவர் வெளியிட்ட தகவல் தொடர்பில்   டாக்டர் நோர் ஹிஷாம் இவ்வாறு கருத்துரைத்தார்.

இச்சம்பவம் குறித்து மேலும் விவரித்த டாக்டர் நோர் ஹிஷாம், சி.டி. ஸ்கேன் செய்வதற்கான தேதியை முன்பதிவு செய்வதற்காக நோயாளி ஒருவர் மருத்துவமனைக்கு வந்ததாக கூறினார்.  முகப்பிடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் உடல் உஷணம் வழக்கமாக இருந்ததோடு தாம் ஆரோக்கியமாக உள்ளதாகவும் அந்நோயாளி கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட பெண் மருத்துவரும் அந்த நோயாளிக்கு சி.டி. ஸ்கேன் செய்துள்ளார். சோதனைக்குப் பின்னர் படங்களை பார்த்த போது அந்நோயாளியின் நுரையீரலில் கோவிட்-19 நோய்க்குரிய அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

அந்த நோயாளியை மருத்துவர் மீண்டும் வலியுறுத்திக் கேட்ட போது தமக்கு ஒரு வார காலமாக இருமலும் காய்ச்சலும் இருந்ததாகவும் எனினும் நோயின் தாக்கம் குறைந்ததைத் தொடர்ந்து தாம் சி.டி. ஸ்கேன் செய்வதற்காக வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த நோயாளிக்கு கோவிட்-19 நோய்த் தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது  குடும்பத்தை விட்டு தனித்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர் நோர் ஹிஷாம் சொன்னார்.


Pengarang :