NATIONALSAINS & INOVASIWANITA & KEBAJIKAN

கோவிட்-19 சோதனையை விரைவுபடுத்த சொந்த ஆய்வுக்கூடம்- செல்கேர் நிறுவனம் திட்டம்

ஷா ஆலம், டிச 30– கோவிட்-19 தொற்றைக் கண்டறியும் சோதனையை மேற்கொள்ளக் கூடிய சொந்த ஆய்வுக் கூடத்தை செல்கேர் மேனேஜ்மெண்ட் சென். பெர்ஹாட் நிறுவனம் அடுத்தாண்டில் அமைக்கவிருக்கிறது.

யுனிசெல் எனப்படும் யுனிவெர்சிட்டி சிலாங்கூருடன் இணைந்து இந்த ஆய்வுக் கூடம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாக அதன் இயக்குநர் முகமது அஸ்பிஸாம் ஹம்சா கூறினார்.

இந்நோக்கத்திற்காக ஷா ஆலம் செக்சன் 7இல் உள்ள யுனிசெல் பல்கலைக்கழக வளாகத்தில் எங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. செல்கேர் சுகாதார பராமரிப்பு மையம் என அழைக்கப்படும் இந்த இடம் ஆய்வுக்கூடம் மற்றும் கிளினிக் வசதிகளைக் கொண்டிருக்கும் என்றார் அவர்.

நாம் சொந்தமாக ஆய்வுக் கூடத்தை கொண்டிருக்கும் பட்சத்தில் கோவிட்-19 சோதனைகளை விரைவாகவும் துல்லியமாகவும் முறையாகவும் மேற்கொள்ள இயலும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மீடியா சிலாங்கூர் ஏற்பாட்டில் நடைபெற்ற கோவிட்-19 சுழற்சி மற்றும் தடுப்பூசி குழப்பங்கள் எனும் தலைப்பிலான விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இவ்விபரங்களை வெளியிட்டார்.

இதற்கு முன்னர் செல்கேர் கோவிட்-19 மாதிரிகளை  மூன்றாம் தரப்பினரிடம் அனுப்பி முடிவுகளைப் பெற்று வந்ததாக அவர் சொன்னார்.

முன்பு நாங்கள் கோவிட்-19 மாதிரிகளை மலாயா பல்கலைக்கழக ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வந்தோம். இதனால் சோதனை முடிவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது என்றார் அவர்.

பி.கே.என்.எஸ்.  எனப்படும் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் துணை நிறுவனமான செல்கேர் கடந்த 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் வாயிலாக ரொக்கமில்லா சுகாதாரச் சேவையை வழங்கும் அமைப்பாக இது விளங்கி வருகிறது.

இந்நிறுவனம் சிலாங்கூர் அரசின் வாயிலாக பெடூலி சேஹாட், காசே ஈபு ஸ்மார் சிலாங்கூர், கோவிட்-19  சமூக சோதனை போன்ற திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.


Pengarang :