PBTSELANGOR

தாமான் ஸ்ரீ மூடாவில் நாளை தொடங்கி இரு தினங்களுக்கு இலவச கோவிட்-19 பரிசோதனை

ஷா ஆலம், ஜன 6- இங்குள்ள  செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடாவில் நாளை தொடங்கி இரு நாட்களுக்கு கோவிட்-19 பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளபடும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் காலை மணி 9.00 முதல் மாலை மணி 4.00 வரை ஸ்ரீ மூடாவிலுள்ள  அஸாலியா மண்டபத்தில் இந்த சோதனை நடத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த  பரிசோதனை இயக்கம்  சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக முன்கூட்டியே செலங்கா அகப்பக்கத்தில் பதிவு செய்து கொள்ளும்படி வட்டார மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்று அதிகம் காணப்படும் பகுதிகளில் பெரிய அளவில் மருத்துவ சோதனை மேற்கொள்ளும் இயக்கத்தை மாநில அரசு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறது. வாகனங்களில் இருந்தவாறு சோதனை செய்து கொள்ளும் திட்டத்தையும் அது அமல்படுத்தி வருகிறது.

இந்த சோதனை முறையை அமல்படுத்தும் முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. இதன் வழி நோய்த் தொற்று உள்ளவர்களை அடையாளம் காண்பதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று, மாநிலத்தில் அதிக அளவில் அதாவது 162 கோவிட்-19 சம்பவங்களை பெட்டாலிங் மாவட்டம் பதிவு செய்தது. ஜாலான் பிளாயர் மற்றும் ஸ்ரீ சூரியா தொற்று மையங்களில் 80 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.


Pengarang :