ECONOMYNATIONALPress Statements

பொது முடக்க அச்சத்தில்  பொருள்களை வாங்கி குவிக்க வேண்டாம்- பொதுமக்களுக்கு அறிவுறுத்து

பெரா, ஜன 10– கோவிட்-19 நோய்த் தொற்றின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவற்கு ஏதுவாக நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் அமலாக்க நடவடிக்கைகளுக்கு மக்கள் தங்களை முன்கூட்டியே தயார் படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக போதிய கால அவகாசம் வழங்கப்படும் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் அமல்படுத்தப்படலாம் என்ற வதந்திகளை நம்பி பதற்றத்தில் பொருள்களை வாங்கிக் குவிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கோவிட்-19 பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் நாளை வெளியிடவுள்ள அறிவிப்பு தொடர்பில்  பரப்பப்படும் பொய்யான தகவல்கள் மற்றும் வதந்திகளை எளிதில் நம்ப வேண்டாம் என்றும் பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

அரசாங்கம் எந்தவொரு முடிவையும் உடனடியாக எடுத்து விடாது. பொதுமக்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக குறைந்தது இரண்டு அல்லது மூன்று நாள் அவகாசமாவது வழங்கப்படும் என்றார் அவர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை இங்குள்ள கெராயோங் தற்காலிக நிவாரண மையத்தில் சென்று கண்டப்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்படலாம் என்ற ஆருடங்கள் குறித்து கேட்கப்பட்ட போது, முன்பு அமல்படுத்தப்பட்டதைப் போல் முழுமையான பொது முடக்கம் இம்முறை அமல்படுத்தப்படாது என நம்புகிறேன். இம்முறை அமல்படுத்தப்படவிருக்கும் எஸ்.ஓ.பி. நடைமுறை குறித்து விரிவாக ஆராய்வதற்காக தேசிய பாதுகாப்பு மன்றம்  மற்றும் நுட்பக் குழு கூட்டத்தை நாளை கூட்டவிருக்கிறோம். எடுக்கப்படும் முடிவுகள் யாவும்  மக்களின் நலனை மையமாக கொண்டதாக இருக்கும் என்பதால் யாரும் குழப்பமடைய வேண்டியதில்லை  என்றார் அவர்.


Pengarang :