ECONOMYNATIONAL

அவசர காலப் பிரகடனம்- அரசு நிர்வாகத்திற்கு பாதிப்பில்லை

கோலாலம்பூர், ஜன 12– நாட்டில்  அமல்படுத்தப்படும் அவசரகாலப் பிரகடனத்தால் அரசு நிர்வாகத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஸூக்கி அலி கூறினார்.

பொருளாதாரம், தொழில்துறை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளை உள்ளடக்கிய பொது மற்றும் தனியார் துறைகள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை பின்பற்றி வழக்கமாகச் செயல்படும் என்று  அவர் சொன்னார்.

கடந்த 1969ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்டதை விட தற்போது பிரகடனப்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முற்றிலும் வேறுபட்டது. பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சூழ்நிலையை நாடு அப்போது எதிர்நோக்கியிருந்தது. பதற்றமான சூழலை சமாளிப்பதற்காக பாதுகாப்புப் படையினரை சம்பந்தப்படுத்திய கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றார் அவர்.

மாட்சிமை தங்கிய மாமன்னரால் தற்போது பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகாலம் அதிகரித்து வரும் கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலானது. இந்நோய்த் தொற்றின் அச்சமூட்டும் வகையிலான அதிகரிப்பு அரசியலமைப்புச் சட்டத்தின் 150வது விதியின் முக்கிய மூன்று அம்சங்களை ஆட்டங்காணச் செய்யும் அளவுக்கு அபாயகரமானதாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் நிலைத்தன்மையை உறுதி செய்யவும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மக்கள் சுபிட்சத்துடன் வாழ்வதை உறுதி செய்யவும் இந்த பிரகடனம் பெரிதும் துணை புரியும் என்று அவர் மேலும் கூறினார்.

பொதுச் சேவைத்துறை ஊழியர்கள் முழு கடப்பாட்டுடன் தங்கள்  பணியை ஆற்றி வருவர் என்பதோடு அரசாங்கத்தின் சேவையளிப்பு முறை எந்த வகையிலும் பாதிக்கப்படாமலிருப்பதையும் உறுதி செய்வர் என்றார் அவர்.


Pengarang :