ECONOMYNATIONAL

அவசரகால உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை- பிரதமர் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜன 13- அவசரகாலம் அமலில் இருக்கும் காலத்தில் கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக 1988ஆம் ஆண்டு தொற்று நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு மாமன்னருக்கு அதிகாரம் உள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.

நோய் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறுவோருக்கு  விதிக்கப்படும் அபராதம் அல்லது தண்டனையை அதிகரிப்பதும் அதில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

இந்நோக்கத்திற்காக கூடுதல் அமலாக்க நடவடிக்கைகளும் கடுமையான தண்டனையும் விதிக்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.

அவசரகால அமலாக்கத்தின் போது பொதுமக்கள் எப்போதும் சுய கட்டுப்பாட்டை  கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தை கூடிய விரைவில் தணிக்கவும் நாட்டின் சுகாதாரம் மீது ஏற்பட்டுள்ள கடுமையான தாக்கத்தைக் குறைக்கவும் வாய்ப்பு கிட்டும் என நாம் பெரிதும் எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக ஆகஸ்டு மாதம் முதல் தேதி வரை நாட்டில் அவசரகாலத்தை அமல்படுத்த மாட்சிமை தங்கிய பேரரசர் ஒப்புதல் வழங்கினார்.


Pengarang :