ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள கோவிட்-19ஐ கேடயமாகப் பயன்படுத்துகிறார் மொகிடின்- பாக்கத்தான் ஹராப்பான் சாடல்

கோலாலம்பூர், ஜன 13- மக்களவையில் தனக்கு ஆதரவு குறைந்து வரும் நிலையில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின யாசின் கோவிட்-19 நோய்த் தொற்று விவகாரத்தை கேடயமாகப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிக் கூட்டணி குற்றஞ்சாட்டியது.

நாடாளுமன்றத்தில் ஆதரவை இழந்து விட்ட நிலையில் கோவிட்-19 நோய்த் தொற்று பின்னால் மறைந்து கொண்டு அவசரகாலத்தைப் பிரகடனப்படுத்தி மக்களை சிரமத்தில் ஆழ்த்தும் செயலில் ஈடுபடக்கூடாது என்றும் அக்கூட்டணி வலியுறுத்தியது.

கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மலேசியர்களைக் காப்பதற்காகவே அவசரகாலம் பிரகடனப்படுத்தப்படுகிறது என்ற மொகிடினின் கூற்றை தாங்கள் நிராகரிப்பதாக அந்த கூட்டணி கூட்டாக வெளியிட்ட அறிக்கை கூறியது.

நடப்பிலுள்ள சட்டங்கள் குறிப்பாக, நேற்று அறிவிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இந்த பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு போதுமானது என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தனியார் மருத்துவமனைகளின் ஒத்துழைப்பை இங்கு உதாரணமாக கூறலாம். இவ்விவகாரத்தில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தனியார் மருத்துவமனைகள் தயாராக இருக்கும் நிலையில் அந்த ஒத்துழைப்பைப் பெறுவதற்கு அவசரகால நிலையைப் பிரகனடப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என அந்த கூட்டணி கூறியது.

மாச்சாங், பாடாங் ரொங்காஸ் உறுப்பினர்கள் உள்பட பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இழந்து விட்ட நிலையில் அவசரகாலத்தைப் பிரகடனப்படுத்துவதற்கு மொகிடின் கூறும் காரணம் ஏற்பதற்கில்லை.

மக்களைச் சிரமப்படுத்துவதற்கும் உங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் கோவிட்-19 பெருந்தொற்றை ஒரு கேடயமாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பாக்கத்தான் தலைவர்கள் கூறினர்.

நேற்று நடைபெற்ற பாக்கத்தான் ஹராப்பான் தலைவர் மன்றக் கூட்டத்திற்குப் பின்னர் பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜசெக தலைவர் லிம் குவான் எங், அமானா தலைவர் முகமது சாபு ஆகியோர் இந்த கூட்டறிக்கையை வெளியிட்டனர்.


Pengarang :