NATIONALSELANGORYB ACTIVITIES

நோய்த் தொற்றிலிருந்தும் அதிகாரத் தொற்றிலிருந்தும் நாட்டைக் காக்க உறுதி கொள்வோம்- டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் பொங்கல் வாழ்த்து

ஷா ஆலம், ஜன 13- கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்தும் அதிகாரத் தொற்றிலிருந்தும் நாட்டைக் காப்பாற்ற பொங்கல் திருநாளில் உறுதி கொள்வோம் என்று கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.

பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அதிகாரத் தரப்பினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு இணையான சிரமத்தை மக்களுக்கு ஏற்படுத்துவதாக அவர் சொன்னார்.

நாட்டை கோவிட்-19 என்ற நோய்த் தொற்று மட்டும் பீடிக்கவில்லை. அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் அதிதீவிர தொற்றும் பீடித்துள்ளது. இன்றைய நடைமுறைக் கட்டுப்பாடுகள் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளையும் தாண்டி அரசியல் காரணங்களையும் உள்ளடக்கியுள்ளது என்பதை அனைவரும்  அறிவர். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ள அரசாங்கம் நோய்த் தொற்றை காரணம் காட்டி நாடாளுமன்ற, சட்டமன்றக் கூட்டங்களை ரத்து செய்துள்ளது இதற்கு தக்க சான்றாகும் என்றார் அவர்.

பொருளாதார மீட்சி, இளம் தலைமுறையினரின் சிறப்பான எதிர்காலம், கல்வி, குடும்ப வருமான அதிகரிப்பு பேச்சு சுதந்திரம், சுபிட்சம் என்ற தொலைநோக்கு சிந்தனையிலிருந்து நாடு விடுபட்டு குறுகிய சிந்தாந்தத்தில் தட்டுத் தடுமாறி பயணிப்பதை காண முடிகிறது.

இத்தகைய தொற்றிலிருந்து நாட்டை மீட்க மக்கள் முனைப்பு காட்ட வேண்டும். இல்லையேல், நம் பிள்ளைகளுக்கு எதிர்காலமில்லை, மலேசியர்களுக்கு நாடே சொந்தமில்லை என்ற நிலை உருவாகிவிடும் என அவர் குறிப்பிட்டார்.

 தோட்டப்புற ரம்மியமான சூழலோடும் கால்நடைகளோடும் பொங்கல் திருநாளைக் கொண்டாடிய காலம் போய் இப்போது முகக்கவரி, கூடல் இடைவெளி, அடிக்கடி கை கழுவதல் என புதிய கட்டுப்பாடுகளுடனும் இயல்புடனும் பொங்கலை கொண்டாட வேண்டிய நிலையில் உள்ளோம்.

இந்த இடர்பாடுகளிலிருந்து விடுபட்டு நாட்டு மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தையும் மற்ற நாடுகளுக்கு இணையான வளர்ச்சியையும் கொடுக்கக்கூடிய அரசாங்கத்தை அமைக்க உறுதி பூணுவோம் என்று டாக்டர் சேவியர் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.


Pengarang :