ECONOMYNATIONAL

பொது முடக்க காலத்தில்  சுய சலவை நிலையங்கள், கண்ணாடிக் கடைகள் செயல்பட அனுமதி

புத்ரா ஜெயா, ஜன 16- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் சுய சலவை நிலையங்கள் மற்றும் கண்ணாடிக் கடைகள் செயல்படுவதற்கு அவசியம் உள்ளது என்ற அடிப்படையில் அவ்விரு துறைகளுக்கும் உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

அவ்விரு துறைகளின் சேவை பொதுமக்களுக்குத் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் நிர்ணையிக்கப்பட்ட சீரான நிர்வாக நடைமுறைகளுக்கேற்ப இந்த அனுமதி வழங்கப்படும் எனக் கூறிய அவர், இதற்கான நிபந்தனைகள் விரைவில் வெளியிடப்படும் என்றார்.

வர்த்தகம் மற்றும் விநியோகத் துறை சார்ந்த தொழில்துறையினர் தங்கள் பணியிடங்களில் நிர்வாக நடைமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை முறையாக கடைபிடிக்காத வர்த்தக ஸ்தாபனங்களுக்கு எதிராக எச்சரிக்கை, அபராதம் அல்லது வர்த்தகத்தை மூடும் உத்தரவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

விதிமுறைகளைப் பின்பற்றுவதில் திருப்தியளிக்கும் போக்கு இல்லாவிட்டால் பொதுமுடக்க காலம் வரை சம்பந்தப்பட்ட துறைகளை மூடும்படி தேசிய பாதுகாப்பு மன்றத்திற்கு பரிந்துரைப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை அமைச்சு எடுக்கும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :