ECONOMYEVENTNATIONAL

போலீசாருக்கு உதவியாக 1,200 சாலை போக்குவரத்து அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்

புத்ரா ஜெயா, ஜன 16- பொது முடக்கம் அமல் செய்யப்பட்டதை முன்னிட்டு இன்று தொடங்கி இம்மாதம் 26 ஆம் தேதி வரை 1,200 சாலை போக்குவரத்து அதிகாரிகள் (ஜே.பி.ஜே.) போலீசாருக்கு உதவியாக சாலை கண்காணிப்புப்  பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

இவர்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில்  போக்குவரத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவர் என்று சாலை போக்குவரத்து இலாகா கூறியது.

எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை உறுதியாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதில் இவ்விரு அமலாக்கத் துறைகளில் அணுக்கமான ஒத்துழைப்பு மிக அவசியமாகத் தேவைப்படுவதாக அத்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.

இந்த கூட்டு  சாலை கண்காணிப்புப் பணியின் போது வாகனமோட்டிகள் அதிகம் பயன்படுத்தும் சாலைகள் மற்றும் இடங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று அது கூறியது.

மூன்று வியூகங்களை மையமாகக் கொண்டு இந்த கூட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படும். நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில சாலைகளில் ரோந்துப் பணியை மேற்கொள்வது, பொது வாகனங்களை மையமாக கொண்டு சாலை தடுப்புகளை அமைப்பது, முதன்மை பேருந்து முனையங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொள்வது ஆகியவையே அந்த மூன்று வியூகங்களாகும் என்று அத்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

விதிமுறைகளைப் பின்பற்றுவதில் பொது மக்களிடம் காணப்பட்ட அலட்சியம் காரணமாக கோவிட்-19 பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையை இவ்விரு அமலாக்கத் துறைகளும்  மேற்கொள்கின்றன.


Pengarang :