இரவு 8.00 மணிக்கு மேல் செயல்பட உணவகங்களுக்கு அனுமதியளிப்பீர்- நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

ஷா ஆலம், ஜன 18- பொது முடக்க காலத்தில் இரவு 800 மணிக்கு மேல் செயல்பட உணவகங்களுக்கு அனுமதியளிக்கும்படி 21 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வர்த்தக லைசென்சில் குறிப்பிட்டுள்ள நேரம் வரை உணவகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்று அந்த உறுப்பினர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வேண்டுகோள் விடுத்தனர்.

உணவகத்துறை சார்ந்தவர்களின் பொருளாதாரம் மீட்சியுறுவதற்கும் உணவு பட்டுவாடா தொழிலில் ஈடுட்டவர்களின் வருமானம் பெருகுவதற்கும் இந்நடவடிக்கை துணை புரியும் என்பதோடு பொதுமக்கள் வீட்டிலேயே இருப்பதையும் இது ஊக்குவிக்கும் என்று அவர்கள் கூறினர்.

உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட விற்பனை நேரக் கட்டுப்பாடு காரணமாக உணவு வாங்குவதில் பொதுமக்கள்  குறிப்பாக வேலை முடிந்து வீடு திரும்புவோர்  பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தினசரி வருமானத்தை மட்டுமே சார்ந்திருக்கும் வணிகர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு இதற்கான எஸ்.ஓ.பி. விதிமுறைகளை மறு ஆய்வு செய்யும்படி தேசிய  பாதுகாப்பு மன்றத்தை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்ட மாநிலங்களில் உணவகங்கள், அங்காடிக் கடைகள், வாகனங்களில் உணவு விற்பனை மற்றும் சாலையோரக் கடைகள் அதிகாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை மட்டுமே செயல்பட முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனிடையே, மோரோட்டேரியம் எனப்படும் வங்கிகளில் கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும்படியும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்பைக் காட்டிலும் தற்போது அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் வர்த்தகர்கள்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் திட்டம் தொடரப்படாததால் கடை வாடகை, தொழிலாளர் சம்பளம் என பல்வேறு வகைகளில் நிதிச்சுமையை அவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர் என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.


Pengarang :