TERPELIHARA
NATIONALPBTSELANGOR

வேலையிடங்களில் நோய்ப் பரவலைத் தடுக்க ஆக்ககரமாக செயல்படுவீர்- மத்திய அரசுக்கு கோரிக்கை

ஷா ஆலம், ஜன 29- வேலையிடங்களில் கோவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த ஆக்ககரமான நடவடிக்கைகளை எடுக்கும்படி மத்திய அரசை சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு வலியுறுத்தியுள்ளது.

நோய்த் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் (பொய்ஸ்) நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு சிலாங்கூர் மாநில அரசு அமல்படுத்தி வரும் திட்டங்களை மத்திய அரசு முன்மாதிரியாகக் கொள்ளலாம் என அந்த பணிக்குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது ஆலோசனை கூறினார்.

இந்த பொய்ஸ் செயல்குழு சிலாங்கூர் அரசு, முதலாளிகள் மற்றும் அரச சாரா அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நோய்த் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளை அடையாளம் காண்பது, அவசரகால திட்டங்களை வரைவது, நோய்த் தொற்றைக் கண்டறியும் சோதனைகளை விரைந்து மேற்கொள்வது, எஸ்.ஓ.பி. நடைமுறைகள் சீராக மேற்கொள்வதை உறுதி செய்வது போன்ற நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்கிறோம் என்றார் அவர்.

கோவிட்-19 நோய்க்கு எதிரான தடுப்பூசி இயக்கத்தை மேற்கொள்ள இன்னும் 18 மாதங்கள் பிடிக்கும் எனக்கூறப்படும் நிலையில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான புதிய அணுகுமுறைகளை அமல்படுத்தப்படுவது அவசியமாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த 18 மாத காலக்கட்டத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகவே, புதிய வியூகங்களை  ஆராய்வது மற்றும் பொது சுகாதார ஆற்றலை மேம்படுத்துவது  போன்ற பணிகளில் மத்திய அரசு கவனம் செலுத்துவது கட்டாயமாகிறது என்றார் அவர்.

 


Pengarang :