ECONOMYNATIONALSELANGOR

நோய்த் தொற்று பரவலுக்கு காரணமாகும் தொழிற்சாலைகளை மூட அதிகாரம் அளிப்பீர்- சிலாங்கூர் அரசு கோரிக்கை

ஷா ஆலம், பிப் 2– கோவிட்-19 நோய்த் தொற்று பரவலுக்கு காரணமாகும் தொழிற்சாலைகளை மூடுவதற்கு அல்லது முற்றுகையிடுவதற்கு சிலாங்கூர் அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் மாநில அரசின் அதிகாரம் வரையறைக்குட்பட்டதாக உள்ளதால் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட தொற்று மையங்களின் உருவாக்கப் பிரச்னைக்குத் உடனடித் தீர்வு காண இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வேலையிடங்களில் நோய்ப் பரவலை துரிதமாக கட்டுப்படுத்துவதில் எங்களுக்கு அனுபவம் உள்ளது. கடந்தாண்டு இறுதியில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய சரக்கு கையாளும் பிரிவில் 247 அந்நியத் தொழிலாளர்களை தனிமைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை உதாராணம் காட்டலாம் என்றார் அவர்.

இவ்விவகாரத்தில் எங்களுக்கு சற்று கூடுதலாக அதிகாரம் வழங்கப்படும் பட்சத்தில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சீராகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது தொழிற்சாலைகளை மூடுவதற்கான உத்தரவை வெளியிடும் அதிகாரம்  மத்திய அரசிடம் மட்டும் உள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

நேற்று அஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சியில் இடம் பெற்ற ‘கோவிட்-19 நோய்த் தொற்றின் அபரிமித அதிகரிப்பை கையாள்வதில் சிலாங்கூரின் வியூகம்‘ எனும் தலைப்பிலான நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

 


Pengarang :