ECONOMYNATIONALSELANGOR

அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் லங்காட் ஆற்றில் தூய்மைக்கேடு தவிர்ப்பு

காஜாங், பிப் 3– அமலாக்கத் தரப்பினர் மற்றும் காஜாங் ஊராட்சி மன்றத்தின் துரித நடவடிக்கையால் லங்காட் ஆற்றில்  தூய்மைக்கேடு ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

ஜாலான் ரேக்கோ பகுதியில் லங்காட் ஆற்றிலிருந்து சுமார் பத்து மீட்டருக்குட்பட்ட ஆற்று ரிசர்வ் நிலத்தில்  19 தோம்புகளில் வைக்கப்பட்டிருந்த 165 லிட்டர் இரசாயன கலவையை அதிகாரிகள் நேற்று கண்டுபிடித்தனர்.

சம்பவம் நிகழ்ந்த இப்பகுதி செமினி 2 நீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவிலும் புக்கிட் தம்போய் சுத்திகரிப்பு மையத்திலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

எளிதில் கரையக்கூடிய அந்த இரசாயனம் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்தை காஜாங் நகராண்மைக்கழக அதிகாரிகள் கண்டு பிடித்ததாக சுற்றுச்சூழல் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

அவ்விடத்தில் இரசாயனக் கசிவு ஏதும் ஏற்படவில்லை என்பது லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியத்தின் தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய  வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த துரித நடவடிக்கை காரணமாக நீர் மாசுபடும் அபாயத்தையும் அதனால் நீர் சுத்திகரிப்பு மையங்களை மூட வேண்டிய சூழலையும் தவிர்த்துள்ளோம் என்றார் அவர்.

அந்த இராசயனப் பொருள்களை அங்கு வீசிய தரப்பினர் அடையாளம் காணப்பட்டு விட்டதாகவும் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீரை மாசுபடுத்தும் குற்றங்களைப் புரிவோருக்கு 2020ஆம் ஆண்டின் (திருத்தப்பட்ட) லுவாஸ் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகளுக்கும் குறையாத சிறைத்தண்டனை மற்றும் இரண்டு லட்சம் வெள்ளி முதல் இருபது லட்சம் வெள்ளி வரையிலான அபராதம் விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது என்றார் அவர்.

நீரை மாசுபடுத்துவோர் கண்டு பிடிக்கப்பட்டு அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியாகி தண்டனை கிடைக்கும் அளவுக்கு துல்லியமான தகவல்களைத் தருவோருக்கு இருபதாயிரம்  வெள்ளி வரை வெகுமதி வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

 


Pengarang :