PBTSELANGOR

பொது முடக்க காலத்தில் குப்பைகளின் அளவு 90 விழுக்காடு அதிகரிப்பு

ஷா ஆலம், பிப் 4-   பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 2.0 அமல்படுத்தப்பட்டது முதல் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள வீடமைப்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளின் அளவு 90 விழுக்காடு அதிகரித்துள்ளது.

வீடுகளில் சமைப்பது மற்றும் இணையம் வாயிலாக உணவுகளை வாங்குவது போன்ற நடவடிக்கைகள் காரணமாக வீடுகளில் சேரும் குப்பைகளின் அளவு அதிகரித்துள்ளதாக கே.டி.இ.பி. வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

முந்தைய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலகட்டத்தில் வீடுகளிலிருந்து 70 விழுக்காட்டு குப்பைகளும் வியாபார ஸ்தலங்களிலிருந்து 30 விழுக்காட்டு குப்பைகளும் அகற்றப்பட்டன. இதன்மூலம்  நாளொன்றுக்கு சுமார் 5,200 டன் குப்பைகள் அகற்றப்பட்டன என்றார் அவர்.

எனினும், இம்முறை உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கப்படாத காரணத்தால் வர்த்தக பகுதிகளில் 10 விழுக்காட்டு குப்பைகள் மட்டுமே சேர்கின்றன என்றார் அவர்.

வீட்டிலேயே இருக்கும்படி பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டதால் குப்பைகளின் அளவு அதிகரித்தாக கூறிய அவர், இருந்த போதிலும் அட்டவணைக்கேற்ப தாங்கள் குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருவதாக சொன்னார்.

குப்பைகளின் அளவு அதிகரித்த காரணத்தால் குப்பை லோரிகள் தினசரி இரண்டு முறை பணியில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாளொன்றுக்கு 2,000 முதல் 2,500 வரையிலான வீடுகளில் குப்பைகளை அகற்றும் வகையில் குப்பை லோரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது குப்பைகளின் அளவு அதிகரித்த காரணத்தால் 1,500 வீடுகளில் சேகரித்தாலே லோரி நிரம்பி விடுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.

Pengarang :