ECONOMYNATIONALPBTSELANGOR

நாளை முதல் இரவுச் சந்தை, சிகையலங்கரிப்பு நிலையம், கார் கழுவும் மையம் செயல்பட அனுமதி

கோலாலம்பூர், பிப் 4– பி.கே.பி. நாளை முதல்  இரவுச் சந்தைகள், சிகையலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் கார்  கழுவும் மையங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.

அவசர கால உத்தரவுகேற்ப  எஸ்.ஓ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றி அந்த வர்த்தகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுவதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

இடர் மதிப்பீடு மற்றும் ஒவ்வொரு துறையின் வாயிலாக உருவாகும் நோய்த் தொற்று மையங்களின் எண்ணிக்கை ஆகியவை மீதான மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த மூன்று வர்த்தக நடவடிக்கைகள் வாயிலாகவும்  புதிய தொற்று மையங்கள் உருவாகவில்லை என்பது கண்டறியப்பட்டப் பின்னர் அவை செயல்படுவதற்கு அனுமதி வழங்குவது என தேசிய பாதுகாப்பு மன்றம் முடிவு செய்தது என்றார் அவர்.

இரவுச் சந்தைகள் மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும். கடைகளுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும், வாடிக்கையாளர்கள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் தனித்தனி வழி ஏற்படுத்த வேண்டும் மற்றும் வாடிக்கையாளர்களின் நடவடிக்கையை கண்காணிக்க ரேலா உறுப்பினர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

சிகையலங்கரிப்பு நிலையங்கள் இரவு 10.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுவதாக கூறிய அவர், எனினும், அங்கு முடி திருத்தும் பணியை மேற்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்படும் என்றார்.

உடற்பயிற்சி மையங்கள் உள்பட பல்வேறு விளையாட்டு மற்றும் பொழுது போக்கு நடவடிக்கைகளுக்கும் சில்லறை வர்த்தகங்களுக்கும் அனுமதி அளிப்பதற்கான சாத்தியம் உள்ளதையும் அமைச்சர் கோடி காட்டினார். இருப்பினும்,  தேசிய பாதுகாப்பு மன்றம் மேற்கொள்ளும் இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.


Pengarang :