ECONOMYNATIONALSELANGOR

கோவிட்-19 பரிசோதனை கருவிக்கு விலை வரம்பை நிர்ணயிப்பீர்- மந்திரி புசார் கோரிக்கை

ஷா ஆலம், பிப் 6-  அவசர கால அமலாக்கத்திற்கேற்ப கோவிட்-19 பரிசோதனை கருவிகளுக்கு விலை வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.

பொது மக்களும் அந்த பரிசோதனை கருவியை வாங்குவதற்கு ஏதுவாக அரசாங்கம் நடப்பில் உள்ள அவசர கால சட்டத்தை பயன்படுத்தி அந்த சாதனத்திற்கு உச்ச வரம்பு விலையை நிர்ணயம் செய்யலாம் என்று அவர் சொன்னார்.

இந்த பரிந்துரையை தாம் தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் முன் வைத்துள்ளதோடு இந்த உபகரணம் வாங்குவதற்கு உதவித் தொகை வழங்கும் சாத்தியத்தையும் எடுத்துரைத்துள்ளதாக அவர் கூறினார்.

நேற்று இரவு முகநூல் வழி நடைபெற்ற கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்த  நேரடி விவாத நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர் கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பினாங்கு முதலமைச்சர் செள கோன் இயோ, நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஹருண் ஆகியோரும் இந்த விவாதத்தில் பங்கு கொண்டனர்.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் ஒரு பகுதியினரை தனியார் மருத்துவமனைகள் ஏற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அத்தரப்பினருடன் அரசாங்கம் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமிருடின் பரிந்துரைத்தார்.

இத்தகைய ஒத்துழைப்பின் வழி அரசாங்க மருத்துவமனைகளின் சுமையை குறைக்கவும் சிகிச்சைக்கான வசதிகளை இரு தரப்பினரும் பயன்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.

Pengarang :