ECONOMYNATIONALSELANGOR

நோய்த் தொற்றைக் கண்டறிவதிவதில் செலங்கா செயலியின் ஆக்ககரமான பங்கு

ஷா ஆலம், பிப் 7– வணிக இடங்களுக்கு பாதுகாப்பாக நுழைவதை உறுதி செய்யும்  செலங்கா செயலியின் ஆக்கத்தன்மை குறித்த சில தரப்பினரின் எதிர்மறையான கூற்றை சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு நிராகரித்துள்ளது.

நோய்த் தொற்று கண்டவர்களுடன் நெருக்கமான தொடர்பில் உள்ளவர்களை அடையாளம் காண்பது, பயனீட்டாளர்களிடமிருந்து தகவல்களைப் பெறுவது ஆகக் கடைசி நிலவரத்தை கண்காணிப்பது மற்றும் நடப்புத் தரவுகளை தயார் செய்வது ஆகிய பணிகளை அந்த செயலி மேற்கொண்டு வருவதாக அந்த பணிக்குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.

இது தவிர அந்த செயலி சாத்தியமான அளவு தரவுகளை ஆய்வு செய்வதோடு நோய்த்  தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளையும் புதிய தொற்று மையங்கள் உருவாகும் சாத்தியம் உள்ள இடங்களையும் அடையாளம் காண உதவுகிறது என்று அவர் சொன்னார்.

செலங்கா செயலி இருந்தும் சிலாங்கூரில் நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரிக்கிறது என்ற தலைப்பில் இணையத் தளம் ஒன்றில் இம்மாதம் 3ஆம் தேதி வெளியான கட்டுரை தொடர்பில் கருத்துரைத்த போது முன்னாள் சுகாதார அமைச்சருமான அவர் இதனைத் தெரிவித்தார்.

நோய்த் தொற்று கண்டவர்களை அடையாளம் காணும் பணிக்கு குறைந்த பணியாளர்களே தேவைப்படும் அளவுக்கு இந்த செயலி ஆக்ககரமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர் ஜூகிப்ளி குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களை மிக விரைவாக அடையாளம் காண்பதற்கு இந்த செயலி பெரிதும் துணை புரியும் என்பதோடு இதன் மூலம் நோய்த்  தடுப்பு நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள முடியும் என்றார் அவர்.

மத்திய அரசாங்கம் மேம்படுத்தியுள்ள மைசெஜாத்ரா செயலி, நோய்த் தொற்று கண்டவர்கள் குறித்து  செலங்கா செயலி பெறும் தகவல்களை பின்தொடரும் பணியை மட்டுமே மேற்கொள்கிறது என்றும் அவர் சொன்னார்.

 

 

 


Pengarang :