ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

காஜாங்கில் இரசாயன கழிவு வீசப்பட்ட  சம்பவம்- சந்தேக நபர் கைது

கோலாலம்பூர், பிப் 8-  காஜாங்கில் சட்டவிரோதமான முறையில் இரசாயனக் கழிவு வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் துறையின் ஒத்துழைப்புடன் சிலாங்கூர் மாநில சுற்றுச்சூழல் துறை மேற்கொண்ட  நடவடிக்கையில் அந்த ஆடவர் பிடிக்கப்பட்டதாக  சுற்றுச்சூழல் இலாகாவின் தலைமை இயக்குநர் நோர்டின் ஜாபர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

எனினும், கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட மேல் விபரங்களை அவர் வெளியிடவில்லை.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த உளவுத் தகவல்களின் அடிப்படையில் அந்த இரசாயனப் பொருள்களை அங்கு வீசுவதற்கு பயன்படுத்தப்பட்ட மூன்று டன் லோரி அடையாளம் காணப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

சந்தேகப் பேர்வழியை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஏதுவாக விசாரணை அறிக்கையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய சிறைத்தண்டனை மற்றும் 500,000  வெள்ளி வரையிலான அபராதம் விதிக்க வகை செய்யும் 1974 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் 34பி பிரிவின் கீழ்  சம்பந்தப்பட்ட நபர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என்றார் அவர்.

இம்மாதம் 3 ஆம் தேதி காஜாங், தாமான் ஸ்ரீ ரெக்கோவில் லங்காட் ஆற்றுக்கு அருகில் உள்ள ரிசர்வ் நிலத்தில் இரசாயனக் கழிவுகள் அடங்கிய கலங்கள் வீசப்பட்டதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

Pengarang :