ALAM SEKITAR & CUACASELANGORYB ACTIVITIES

பண்டான் இண்டா, தாமான்  கெஞ்சானா வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு

ஷா ஆலம், பிப்11-  பண்டான் இண்டா, தாமான் கெஞ்சானா வட்டார மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக எதிர் நோக்கி வந்த வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள ஒரு கிலோமீட்டர் தூர கால்வாய் தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து  அங்கு நிலவிய திடீர் வெள்ளப் பிரச்னை களையப்பட்டுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

கடந்தாண்டு ஆரம்பிக்கப்பட்ட 12 லட்சம் வெள்ளி மதிப்பிலான  இந்த மேம்பாட்டுத் திட்டம் கடந்த ஜனவரி மாதம் முற்றுப் பெற்றதாக அவர் சொன்னார்.

கால்வாயை தரம் உயர்த்தும் பணி  மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து பண்டா இண்டா குறிப்பாக, தாமான் கெஞ்சானா பகுதி மக்கள் இதுநாள் வரை எதிர்நோக்கி வந்த வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றார் அவர்.

இத்திட்டத்தை விரைந்து மேற்கொள்வதில் பெரிதும் துணை புரிந்த அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய தரப்பினருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கால்வாயை சீரமைக்கும் பணி கம்போங் செராஸ் பாரு முதல்  பண்டான் இண்டா, தாமான் கெஞ்சானா வரை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பண்டான் இண்டா வட்டாரத்தில் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணும்படி அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் மற்றும்  பொதுப்பணித்துறை துறைக்கு ஹிஷாம் ஹஷிம் உத்தரவிட்டிருந்தார்.



Pengarang :