NATIONAL

கோவிட்-19 தடுப்பூசியைப் பெறும் முதல் நபராக பிரதமர் மொகிடின் விளங்குகிறார்

கோலாலம்பூர், பிப் 13– இம்மாத பிற்பகுதியில் தேசிய தடுப்பூசித் திட்டம் அமல்படுத்தப்படும் போது கோவிட்-19 தடுப்பூசியைப் பெறும் முதல் நபராக பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் விளங்குவார்.

அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சரும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சருமான கைரி ஜமாலுடின் இதனை உறுதிப்படுத்தினார்.

கோவிட்-19 தடுப்பூசியைப் பெறும் முதல் நபர் பிரதமர் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். தடுப்பூசி பாதுகாப்பானது என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் பிரதமர் முதல் நபராக பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவுள்ளார் என்று அவர் சொன்னார்.

தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் இம்மாத இறுதியில் தொடங்கும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் இம்மாதம் 4ஆம் தேதி கூறியிருந்தார். மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும் இந்த இலவச தடுப்பூசித் திட்டத்தின் வாயிலாக 2 கோடியே 65 லட்சம் பேர் அதாவது நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 80 விழுக்காட்டினர் இந்த தடுப்பூசியைப் பெறுவர் என அவர் கூறியிருந்தார்.

இம்மாதம் தொடங்கி  ஏப்ரல் மாதம் வரை மேற்கொள்ளப்படவிருக்கும் முதல் கட்டத் தடுப்பூசித் திட்டத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ள ஐந்து லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும்.

ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை நடைபெறும் இரண்டாம் கட்ட திட்டத்தில் அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்கள், இருதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், மாற்றுத் திறனாளிகள் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பதினெட்டு வயதுக்கும் மேற்பட்டவர்களை மையமாகக் கொண்ட  மூன்றாம் கட்ட தடுப்பூசித் திட்டம் ஆகஸ்டு மாதம் தொடங்கி அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரை  மேற்கொள்ளப்படும்.

 


Pengarang :