MEDIA STATEMENTPress StatementsSELANGOR

கோவிட்-19 அதிகமுள்ள 4 மாவட்டங்களில் தனிமைப்படுத்தும் மையம்-சிலாங்கூர் திட்டம்

ஷா ஆலம், பிப் 13- கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிள்ளான், உலு லங்காட், பெட்டாலிங், சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தும் மையங்களை அமைக்க சிலாங்கூர் திட்டமிட்டுள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள், நோய் சோதனை முடிவுக்காக காத்திருப்பவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் சௌகர்யமான சூழலில் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்படுவதற்கு ஏதுவாக இந்த இந்த மையங்கள் அமைக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அண்மைய காலமாக இந்த நான்கு மாவட்டங்களும் சிலாங்கூர் மாநிலத்தில் அதிக கோவிட்-19 சம்பவங்களை பதிவு செய்து வருகின்றன. ஆக சமீபத்திய கோவிட்-19 எண்ணிக்கை 1,082ஆக பதிவாகி மாநிலத்தில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 83,281ஆக உயர்வு காண்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சுயமாக தனிமைப்படுத்திக் கொள்வதற்கு உகந்த சூழலை வீட்டில் கொண்டிராதவர்களுக்காக இந்த  தனிமைப்படுத்தும் மையம் உருவாக்கப்படுகிறது. ஏனென்றால் வீடுகளில் முறையான காற்றோட்ட வசதி இல்லாதது, குறைவான அறைகளைக் கொண்டிருப்பது மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது போன்ற பிரச்னைகளை பலர் எதிர்நோக்குகின்றனர் என்றார் அவர்.

வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்குரிய வசதிகளைக் கொண்டிராதவர்கள் குறிப்பாக பி.பி.ஆர். எனப்படும் மக்கள் வீடமைப்புத் திட்ட வீடுகளில் வசிப்போரின் வசதிக்காக இத்திட்டம் மேற்கொள்ளப் படுவதாக பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

இந்த மையத்தில் தங்கியிருக்கும் போது நோய்த் தொற்று உறுதிப்படுத்தப் படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நோயாளிகள் உடனடியாக  செர்டாங், விவசாய பல்கலைக்கழக கண்காட்சி பூங்காவில் உள்ள (மேப்ஸ்)  பி.கே.ஆர்.சி. மையத்திற்கு அல்லது அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

 


Pengarang :