ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

தூய்மைக்கேட்டிற்கு காரணமான தொழிற்சாலைகளுக்கு சட்டப்பூர்வமாக்கும் திட்டத்தில் இடமில்லை- ஆட்சிக்குழு உறுப்பினர் இங் திட்டவட்டம்

ஷா ஆலம், பிப் 15– லைசென்ஸ் இன்றி செயல்படும் தொழிற்சாலைகளை சட்டப்பூர்வமாக்கும் சிலாங்கூர் அரசின் திட்டத்தில்  சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் சேர்க்கப்பட மாட்டாது.

முறையான அனுமதியின்றி செயல்படும் தொழிற்சாலைகளுக்கு லைசென்ஸ் வழங்கும் நோக்கில் கடந்த 2019ஆம்  ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டத்தில் பிரச்னைக்குரிய தொழிற்சாலைகளை சேர்த்துக் கொள்வதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

கடந்தாண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைய வேண்டிய இந்த திட்டம் நடமாட்டக கட்டுப்பாட்டு ஆணை காரணமாக டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்ததாக அவர் சொன்னார்.

தொழிற்சாலைகளை சட்டப்பூர்வமாக்கும் திட்டத்தை அமலாக்குவதற்கு நீண்ட காலம் பிடிப்பதால்  சட்டவிரோத தொழிற்சாலைகள் காரணமாக ஆறுகள் மாசுபடுவதற்கான சாத்தியம் உள்ளதாக நீர் மற்றும் எரிசக்தி ஆய்வு சங்கம் குற்றஞ்சாட்டியிருப்பது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து ஊராட்சி மன்றங்களுக்கும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் தூய்மைக்கேட்டிற்கு எதிரான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஊராட்சி மன்றங்கள், சுற்றுசூழல் துறை உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து ஆற்றோரங்களில் உள்ள தொழிற்சாலைகளை மையமாக கொண்டு இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதி வரையில் மாநிலத்தில் 5,589 தொழிற்சாலைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாகவும் அவற்றில் 869 தொழிற்சாலைகள் பிரதான ஆறுகளுக்கு அருகில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் அதிகாரத்திற்குட்ட பகுதிகளில் மிக அதிகமாக அதாவது 546 சட்டவிரோத தொழிற்சாலைகள் உள்ளதாக கூறிய அவர், அதற்கு அடுத்து காஜாங்கில் 155 தொழிற்சாலைகள் உள்ளன என்றார்.


Pengarang :