ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

முறையான திட்டமிடல்-மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலையற்ற அரசு

கோலாலம்பூர், பிப் 22– மாணவர்களின் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்ய ஐந்து பரிந்துரைகளை எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்வைத்துள்ளது.

வரும் மார்ச் மாதம் முதல் தேதி தொடங்கி பள்ளிகள் கட்டங் கட்டமாக திறக்கப்படும் என்ற கல்வியமைச்சின் அறிவிப்பை கருத்தில் கொண்டு இந்த பரிந்துரையை தாங்கள் முன்வைப்பதாக அக்குழு கூறியது.

பள்ளிகள் வரும் மார்ச் மாதம் திறக்கப்படும் என்ற அறிவிப்பை கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். அனைத்துப் பகுதிகளுக்குமான இந்த ஒட்டுமொத்த முடிவு மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பல்வேறு பிரச்னைகளை கவனத்தில் கொள்ளாமல் எடுக்கப்பட்டதாக தோன்றுகிறது.

நாடு கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் மாணவர்களின் கல்வியில் தொடர்புடைய தரப்பினரின் குறிப்பாக  பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்தை கல்வியமைச்சு பெற்றிருக்க வேண்டும்.

ஒட்டு மொத்த நாட்டு மக்களையும் உட்படுத்திய  பெரிய விவகாரங்களில் முடிவெடுப்பதில் இது போன்ற திறனற்ற போக்கு நிலவுவதை இனியும் தவிர்க்க வேண்டும் என்று அக்குழு வலியுறுத்தியது.

இணையம் வாயிலாக வீட்டிலிருந்தே கல்வி கற்பதற்கு ஏதுவாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பெரும் செலவில் கணினி போன்ற உபகரணங்களை வாங்கித் தந்துள்ளனர். பள்ளிகள் திறக்கப்படும் தகவலை கல்வியமைச்சர் வெளியிடுவதற்கு இரு தினங்களுக்கு முன்னர் நமது பிரதமர் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடக்கி வைக்கிறார். இது போன்ற முரண்பட்ட அறிவிப்புகளும் நடவடிக்கைகளும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூறியது.

இவ்விவகாரம் தொடர்பில் இம்மாதம் 20ஆம் தேதி பக்கத்தான் கல்விக் குழு சமர்ப்பித்த பரிந்துரைகளை கல்வியமைச்சு கவனத்தில் கொள்ள வேண்டும் என அது கேட்டுக்கொண்டது.

 


Pengarang :