NATIONALSELANGOR

தடுப்பூசி திட்ட விளக்கமளிப்பில் கலந்து கொள்ளும் முதல் மாநிலம் சிலாங்கூர்

ஷா ஆலம், பிப் 23– கோவிட்-19 தடுப்பூசி பணிக்குழுவுடன் இயங்கலை வாயிலாக விளக்கமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்ளும் முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது.

தேசிய தடுப்பூசித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் அமலாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் விரிவான விளக்கத்தை தடுப்பூசி பணிக்குழுவும் தேசிய பாதுகாப்பு மன்றமும் வழங்கின. முதல் கட்டத் தடுப்பூசித் திட்டம் நாளை மறுநாள் தொடங்குகிறது. மத்திய மாநில அரசுகளின் சாதனங்களும் மனிதவளமும் இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

தேசிய தடுப்பூசித் திட்டம் விரிவான அளவில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக மாநில அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளது என்றார் அவர்.

இந்த தேசிய தடுப்பூசித் திட்டம் முன்பு அறிவிக்கப்பட்டது போல் வரும் வெள்ளிக்கிழமை அல்லாமல் முன்கூட்டியே அதாவது புதன்கிழமையே தொடங்கப்படுவதாக அறிவியல், தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சருமான கைரி தெரிவித்தார்.


Pengarang :