ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூர் மாநில மக்களுக்கான தடுப்பூசி மே அல்லது ஜூன் மாதம் கிடைக்கும்

ஷா ஆலம், பிப் 23- சிலாங்கூர் மாநில அரசு வாங்கவிருக்கும் இருபது லட்சம் முதல் ஐம்பது லட்சம் வரையிலன கோவிட்-19 தடுப்பூசி இவ்வாண்டு மே அல்லது ஜூன் மாதவாக்கில்  வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு இந்த தடுப்பூசி கொள்முதல் அவசியமானதாக விளங்குகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த தடுப்பூசி வந்தடைந்ததும் அது குறித்து மக்களுக்கு நாம் அறிவிப்போம். வாங்கவிருக்கும் தடுப்பூசியின் உண்மையான எண்ணிக்கை இன்னும் தீர்மானிக்கப் படவில்லை. எனினும், அது எண்ணிக்கையில் அதிகமானதாகவும் அதிக செலவினத்தை உள்ளடக்கியதாகவும் இருக்கும் என்று அவர் சொன்னார்.

நோய்த் தொற்று சாத்தியம் அதிகம் உள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான இயக்கத்தை ஷா ஆலம்,  செக்சன் 15இல் உள்ள நெஸ்லே தொழிற்சாலையில் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட், நெஸ்லே மலேசியா பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஜூவான் ஏரனோல்ஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சிலாங்கூரில் கோவிட்-19 தடுப்பூசிகளை விநியோகிப்பது மற்றும் பகிர்ந்தளிப்பது தொடர்பில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை  அமைச்சர் கைரி ஜமாலுடினுடன் இன்று பேச்சு நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாநிலம் முழுமைக்கும் வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து இந்த சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டது என்றார் அவர்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவது மற்றும் இவ்விவகாரத்தில் மத்திய அரசின் சுமையைக் குறைப்பது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் சிலாங்கூர் சொந்தமாக தடுப்பூசிகளை வாங்கவுள்ளதாக மந்திரி புசார் முன்னதாக கூறியிருந்தார்.


Pengarang :