NATIONALSELANGOR

170 தீயணைப்பு வீரர்கள் முதல் கட்டமாக கோவிட்-19 தடுப்பூசி பெறுவர்

ஷா ஆலம், மார்ச் 5- தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையைச் சேர்ந்த 170 வீரர்கள் முதல் கட்டமாக தடுப்பூசியைப் பெறுவர்.

வரும் மார்ச் மாதம் 16ஆம் தேதி தொடங்கி மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சுகாதார மையங்களில் கட்டங் கட்டமாக அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று துறையின் இயக்குநர் நோராசாம் காமிஸ் கூறினார்.

பெட்டாலிங், கிள்ளான், கோல லங்காட், சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுகாதார மையங்களில் அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். இப்பணி வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.

உடல் நிலை குறித்து எதுவும் தெரியாத நிலையில் ஆபத்தில் உள்ளவர்கள் மற்றும் தனிநபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டிய கட்டாயம் தீயணைப்பு வீர ர்களுக்கு உள்ளதால் இத்துறையிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் தடுப்பூசியைப் பெறுவதை உறுதி செய்யும் நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மூன்று பிரிவுகளை உள்ளடக்கிய முன்களப் பணியாளர்களை இலக்காக கொண்டு 68,677 பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்று  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார்.


Pengarang :