ECONOMYSELANGORYB ACTIVITIES

கிஸ் ஐ.டி‘. உதவித் திட்டத்தில் மேலும் 5,000 பெண்களுக்கு வாய்ப்பு

ஷா ஆலம், மார்ச் 8– கிஸ் ஐ.டி. எனப்படும் தனித்து வாழும்  தாய்மார்களுக்கான விவேக சிலாங்கூர் பரிவுமிக்க தாய்மார் திட்டத்தில் மேலும் ஜயாயிம் பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

கோவிட்-19 நோய்த் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு உதவும் வகையில் கிஸ் திட்டத்தில் உதவி பெறுவோர் எண்ணிக்கை உயர்த்தப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இத்திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் வழங்கப்படும் 2,400 வெள்ளி உதவித் தொகை சம்பந்தப்பட்டத் தரப்பினரின் பொருளாதார சுமையை ஓரளவு குறைக்கவும் குடும்பத்திற்கு தேவையான  பொருள்களை வாங்கவும் இயலும் என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்றின் விளைவாக, பெண்களின் பொறுப்பில் இருக்கும் பி40 பிரிவைச் சேர்ந்த குடும்பங்களில் 64 விழுக்காடு அடிப்படை தேவைக்கு பொருள்களை வாங்க இயலாத அளவுக்கு ஏழ்மையில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனைக் கருத்தில் கொண்டு, கிஸ் ஐ.டி. திட்டத்தில் மேலும் ஐயாயிரம் பேரை இணைத்து அவர்களின் பொருளாதார சுமையைக் குறைக்கும் வகையில் ஆண்டுக்கு 2,400 வெள்ளி வழங்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது என்றார் அவர்.

மாதம் 2,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பப் பெண்கள் மற்றும் இ-காசே திட்டத்தின் கீழ் ஏழைகள் அல்லது பரம ஏழைகளாக வகைப்படுத்தப்பட்டவர்களை இலக்காக க்கொண்டு  இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கிஸ் ஐ.டி. திட்டத்திற்கான விண்ணப்ப பாரங்களை www.kiss.com.my என்ற அகப்பக்கம் வாயிலாக  அல்லது அருகிலுள்ள சட்டமன்ற உறுப்பினர் சேவை மையங்களில் பெறலாம்.

 


Pengarang :