MEDIA STATEMENTSELANGOR

வருடாந்திர மானியத்தை விவேகத்துடன் பயன்படுத்துவீர்- இந்திய சமூகத் தலைவர்களுக்கு அறிவுறுத்து

ஷா ஆலம், மார்ச் 10–  தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வருடாந்திர மானியத்தை மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்துவதில் விவேகமாக செயல்படும்படி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய சமூகத் தலைவர்கள் (கே.கே.ஐ.) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மாநில அரசினால் வழங்கப்படும் 10,000 வெள்ளி ஆண்டு மானியத்தை அவர்கள் முறையாக நிர்வகிக்க வேண்டும் என்தோடு உதவி வழங்குவதில் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட யாரும் விடுபடாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் நினைவுறுத்தினார்.

தங்களுக்கு வழங்கப்பட்ட பதவி கடப்பாடும் பொறுப்புணர்வும் கொண்டது என்பதை சமூகத் தலைவர்கள் உணர வேண்டும். இதனை தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசாக யாரும் கருதக்கூடாது. தங்களின் செயல்பாடுகளை குறிப்பாக நிதியை நிர்வகிப்பது தொடர்பான விஷயங்களை மக்கள் அணுக்கமாக கவனித்து வருவர் என்பதை எந்நேரமும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

புதிதாக நியமனம் செய்யப்பட்ட சமூகத் தலைவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்துவர் என்பதோடு தங்கள் பணியில் உயர் நம்பகத் தன்மையையும் நாணயத்தையும் கடைபிடிப்பர் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள ஜூப்ளி பேராக் அரங்கில் சமூகத் தலைவர்களுக்கு பதவி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வுக்கு  தலைமையற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் கூறினார்.

2021-2022ஆம் ஆண்டு தவணைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 50 சமூகத் தலைவர்களுக்கு இந்நிகழ்வில் நியமனக் கடிதங்களை கணபதிராவ் வழங்கினார். செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ்  ஜோர்ஜ் உள்ளிட்ட தலைவர்கள் இந்நிகழ்வில் கலநது கொண்டனர்.

சமூகத் தலைவர்கள் தங்கள் பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை சம்பந்தப்பட்டத் தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும் அதேவேளையில் அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் தொடர்பான தகவல்களை மக்களிடம் சேர்ப்பிக்கும் தொடர்பாளர்களாகவும் செயல்பட வேண்டும் என்று கணபதிராவ் வலியுறுத்தினார்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் அமல்படுத்தும் சுகாதாரம், கல்வி, சமூகநலன் தொடர்பான உதவிகள் குறித்த தவல்களை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் பொறுப்பும் சமூகத் தலைவர்களுக்கு உள்ளது என்றார் அவர்.

பலதரப்பட்ட உதவித் திட்டங்கள் தொடர்பான தகவல்களை நாங்கள் கூட (சட்டமன்ற உறுப்பினர்கள்) அறியாமல் இருக்கலாம். இத்தகைய விஷயங்களை நன்கு அறிந்திருக்கும் பட்சத்தில் அவர்களால் பொதுமக்களுக்கு உதவிகளை வழங்க இயலும் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :