ECONOMYNATIONALSELANGOR

தடுப்பூசி வாங்க 10 கோடி வெள்ளி ஒதுக்கீடு- சிலாங்கூர் அரசு அங்கீகாரம்

ஷா ஆலம், மார்ச் 19- தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்துவதில் உதவும் வகையில் சொந்தமாக தடுப்பூசிகளை வாங்க சிலாங்கூர் அரசு 10 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அந்த தடுப்பூசி தற்போது  தேசிய மருந்தக ஒழுங்கு முறை பிரிவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் வரும் மே அல்லது ஜூன் மாதவாக்கில் அதற்கான அங்கீகாரம் கிடைத்து விடும் என்றும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் சரியான தடத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எந்த தடுப்பூசியைக் கொள்முதல் செய்வது என்பது தீர்மானிக்கப்பட்டு விட்டது. எனினும், அது கிடைக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்றார் அவர்.

அந்த தடுப்பூசி சுகாதார அமைச்சினால் அடையாளம் காணப்பட்ட ஐந்து வகை தடுப்பூசிகளில் ஒன்று எனக் குறிப்பிட்ட அவர், மருந்தக ஒழுங்கு முறை பிரிவின் அங்கீகாரத்திற்குப் பிறகே அதன் பெயர் வெளியிடப்படும் என்றார்.

இங்குள்ள ஷா ஆலம் மருத்துவமனைகளில் இரண்டாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றை விரைந்து கட்டுப்படுத்தும் நோக்கிலும் இவ்விவகாரத்தில்  மத்திய அரசின் சுமையைக் குறைக்கும் வகையிலும் சிலாங்கூர் மாநில அரசு சொந்தமாக தடுப்பூசியை வாங்கும் என்று அமிருடின் முன்னதாக அறிவித்திருந்தார்.


Pengarang :