ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

சுங்கை பாலாக் ஆறு மாசுபடக் காரணமான தொழிற்சாலைக்கு வெ.225,000 அபராதம்

ஷா ஆலம், மார்ச் 20– சுங்கை பாலாக் ஆற்றில் தூய்மைக்கேடு ஏற்படக் காரணமான உணவுத் தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றுக்கு காஜாங், செஷன்ஸ் நீதிமன்றம் 2 லட்சத்து 25 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி இக்குற்றத்தை புரிந்ததாக கம்போங் பாரு பலாக்கோங்கை அந்த அந்த தொழிற்சாலைக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டிருந்தது.

நீர்ப் பிடிப்பு பகுதியில் அனுமதிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிக அளவில் தொழிலியல் கழிவுகளைக் கொட்டியது மற்றும் பயன்படுத்தப்பட்ட மசகு எண்ணெய் உள்ளிட்ட கழிவுகளை சுங்கை பாலாக்கில் கொட்டியது தொடர்பில் அத்தொழிற்சாலைக்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

அத்தொழிற்சாலைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை அதன் மனித வள நிர்வாகி ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி முகமது காஃபி சே அலி இத்தீர்ப்பை வழங்கினார்.

அந்த தொழிற்சாலைக்கு எதிராக 2009 (தொழிலியல் கழிவு) சுற்றுச்சூழல் தர விதிகளின் 11(1)(ஏ) பிரிவின் கீழ் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டதாக சிலாங்கூர் மாநில  சுற்றுச்சூழல் துறையின் இயக்குநர் நோர் அஜிசா ஜாபர் கூறினார்.

சுங்கை பாலாக்கில் நீர் மாசுபாடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த உணவுத் தயாரிப்பு தொழிற்சாலை மீது சோதனை மேற்கொண்ட சுற்றுசூழல் துறை கடந்தாண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி அதன் நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிட்டது.


Pengarang :