AMA
MEDIA STATEMENTNATIONALSELANGOR

தடுப்பூசித் திட்டத்திற்கு மூத்த குடிமக்களை பதிவு செய்வதில் எஸ்.டி.எஃப்.சி. உதவி

ஷா ஆலம், மார்ச் 23- கோவிட்-19 தடுப்பூசியை பெறும் திட்டத்தில் மூத்த குடிமக்கள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வதில் சிலாங்கூர் மாநில கோவிட்-19 பணிக்குழு தேவையான உதவிகளைச் செய்யும்.

தற்போது 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் தங்களைப் பதிந்து கொள்ளவில்லை என்று அப்பணிக்குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.

மைசெஜாத்ரா செயலி இல்லாதது, இணைய சேவை பிரச்னை மற்றும் இணையம் வாயிலாக பதிவு செய்யும் வழிமுறையை அறிந்திராதது ஆகிய காரணங்களால் அவர்களால் இந்த பதிவு நடவடிக்கையில் பங்கு கொள்ள முடியவில்லை என்று அவர் சொன்னார்.

இத்தகைய தரப்பினரை இணையம் வாயிலாகவும் வழக்கமான நடைமுறையிலும் பதிவு செய்வதற்கான நடவடிக்கையை சிலாங்கூர் மாநில அரசின் உதவியுடன் மேற்கொள்ள தாங்கள் தயாராக உள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சருமான அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் மாநில அரசு தற்போது ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொடக்க கட்டமாக தடுப்பூசித் திட்டத்திற்கான பதிவை மேற்கொள்வதில் உதவிகளை வழங்கவிருக்கிறோம் என்றார் அவர்.

இந்த தடுப்பூசி பதிவு நடவடிக்கையில் கிராம மேம்பாட்டு நிர்வாக மன்றங்களுடன் தாங்கள் இணைந்து செயல்படவுள்ளதாகவும் அவர் சொன்னார்.

 


Pengarang :