NATIONALSELANGORWANITA & KEBAJIKAN

மாற்றுத் திறனாளி  பிள்ளைகள் உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வீர்- கல்வி ஸ்தபானங்களுக்கு வேண்டுகோள்

ஷா ஆலம், மார்ச் 24- அனிஸ் எனப்படும் சிலாங்கூர் சிறப்பு பிள்ளைகள் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யும்படி மாற்றுத் திறனாளிகள் கல்விக் கூடங்கள் மற்றும் சமூக மறுவாழ்வு மையங்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

சமூக நல இலாகா மற்றும் கல்வியமைச்சில் பதிவு செய்துள்ள மாற்றுத் திறனாளி பிள்ளைகளுக்கான அமைப்புகளுக்கு ஒரு முறை வழங்கும் வகையில் நிதியுதவித் திட்டத்தை மாநில அரசு கொண்டுள்ளதாக  அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சிறப்பு பிள்ளைகளுக்கான தொடக்க இடர் திட்டங்களை அமல்படுத்தும் அமைப்புகள் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பம் செய்யலாம் என்றார் அவர்.

தங்கள் மையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் மாற்றுத் திறனாளி பிள்ளைகளுக்கு மேலும் ஆக்ககரமான மற்றும் முறையான கல்வித் திட்டங்களை மேற்கொள்வதற்கும் இந்த நிதியுதவி பெரிதும் துணை புரியும் என்று அவர் மேலும் சொன்னார்.

இந்த அனிஸ் திட்டத்திற்கு யாவாஸ் எனப்படும் யாயாசான் அனாக் வாரிசான் சிலாங்கூர் அமைப்பின் வாயிலாக ஐந்து லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஒவ்வொரு அமைப்பும் கூடுதல் பட்சம் பத்தாயிரம் வெள்ளி வரை விண்ணப்பம் செய்யலாம் என்றார்.

ஆர்வமுள்ள அமைப்புகள்  http://www.anisselangor.com/didikanis  என்ற அகப்பக்கம் வாயிலாக வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதிக்குள்  இந்த நிதிக்கான விண்ணப்பத்தை செய்யலாம்.

அமைப்பின் பதிவு சான்றிதழ் நகல், சமூக நல இலாகா மற்றும் கல்வியமைச்சின் பதிவு நகல், தங்கள் அமைப்பில் தங்கி பயிற்சி பெறுவோரின் பெயர்ப் பட்டியல் மற்றும்  ஆகக் கடைசி  வங்கிக் கணக்கு அறிக்கையின் நகல் ஆகியவற்றையும் விண்ணப்பதாரர்கள் சமர்பிக்க வேண்டும்.

 


Pengarang :