ECONOMYSELANGOR

ஹிஜ்ரா கடனுதவித் திட்டத்தின் வாயிலாக 57,211 தொழில்முனைவோர் உருவாக்கம்

ஷா ஆலம், மார்ச் 30- ஹிஜ்ரா சிலாங்கூர் கடனுதவித் திட்டம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது முதல் இதுவரை 57,211 தொழில்முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

‘மைக்ரோ கிரடிட்‘, ‘ஜீரோ டூ ஹீரோ‘, ‘கோ டிஜிட்டல்‘, நியாகா டாருள் ஏசான்‘ (நாடி) ஆகிய கடனுதவித் திட்டங்கள் மூலம் அவர்கள் 55 கோடியே 45 லட்சத்து 40 ஆயிரத்து 500 வெள்ளி கடனாகப் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

வியாபாரம் தொடங்க ஆர்வம் இருந்தும் மூலதனம் இல்லாதவர்கள், கூடுதல் மூலதனம் தேவைப்படுவோர், கோவிட்-19 நோய்த் தாக்கம் காரணமாக வியாபாரத்தில் இழப்பை எதிர்நோக்கியர்கள் என பல்வேறு தரப்பினருக்கு இந்த ஹிஜ்ரா திட்டத்தின் மூலம் உதவி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 பரவலுக்குப் பின்னர் பல வணிகர்கள் தொடர்ச்சியாக கடனுதவி பெற்ற காரணத்தால் கடன் பெற்றவர்களின எண்ணிக்கை உயர்வு கண்டது என்றார் அவர்.

சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் 10 கோடி வெள்ளியை சுழல் நிதியாக கொண்டு ஹிஜ்ரா மைக்ரோ கிரடிட் கடனுதவித் திட்டத்தை சிலாங்கூர் அரசு தொடக்கியது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களை வழிநடத்துவதற்கு ஏதுவாக கடனுதவித் திட்ட பங்கேற்பாளர்களுக்கு பயிற்சிகளும் உதவிகளும் வழங்கும் வகையில் ஜீரோ டூ ஹீரோ திட்டம் பின்னர் அமல்படுத்தப்பட்டது.

சிறு வியாபாரிகளுக்கு 1,000 வெள்ளி முதல் 5,000 வெள்ளி வரை கடனுதவி வழங்க வகை செய்யும் நாடி திட்டத்தை மாநில அரசு கடந்த பிப்ரவரி மாதம் தொடக்கியது. வியாபார நடவடிக்கைகளை இலக்கவியலுக்கு மாற்றுவதற்கு உதவும் வகையில் கோ டிஜிட்டல் திட்டம் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது.


Pengarang :