ECONOMYPBTSELANGOR

தற்காலிக லைசன்ஸ் விண்ணப்ப முறையை எளிதாக்குவீர்- மந்திரி புசார் வலியுறுத்து

ஷா ஆலம், மார்ச் 30-  கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தற்காலிக லைசன்ஸ் விண்ணப்ப முறையை எளிதாக்கும்படி ஊராட்சி மன்றங்களை மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.

சிறு வியாபாரிகள் மற்றும் வாகனங்களில் பொருள்களை வியாபாரம் செய்வோருக்காக ஊராட்சி மன்றங்கள் விஷேசமாக இடங்களை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூரில் பெரும்பாலான ஊராட்சி மன்ற இடங்கள் நகர்ப்புறங்களில் உள்ளதால் கண்ட இடங்களில் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைக் காண விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்தப் பின்னர் திடீரென வேலை நீக்கம் செய்யப்படுவோம் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டோம். மாற்று வழியாக இப்போது வியாபாரத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு மாநில அரசுடன் இணைந்து ஊராட்சி மன்றங்களும் உதவ வேண்டும் என்றார் அவர்.

இங்குள்ள சிலாங்கூர் பொது நூலகத்தில் நடைபெற்ற ஹிஜ்ரா சிலாங்கூர் கடனுதவி அமைப்பின் ஆறாம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இவ்வாறு கூறினார்.

கடந்தாண்டு மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட முதலாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் தாக்கம் இன்றளவும் உணரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக நாடி எனப்படும் நியாகா டாருள் ஏசான்  மற்றும் கோ டிஜிட்டல் போன்ற கடனுதவி திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Pengarang :