ECONOMYSELANGOR

7,900  டாக்சி, பஸ் ஓட்டுநர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் விநியோகம்

ஷா ஆலம், ஏப் 2- சிலாங்கூரிலுள்ள 7,900 டாக்சி மற்றும் பஸ் ஓட்டுநர்களுக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கும் பொறுப்பை மாநிலத்திலுள்ள ஊராட்சி மன்றங்கள் ஏற்றுள்ளன.

இரண்டாம் முறையாக அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட அத்துறை சார்ந்தவர்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி முதல் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் முதல் கட்ட உணவுப் பொருள் விநியோகத்தின் போது எட்டு ஊராட்சி மன்றங்களில் உள்ள  3,571 பேர் 100 வெள்ளி மதிப்பிலான் உணவுப் பொட்டலங்களைப் பெறுவர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கும் திட்டத்திற்கு 10 லட்சம் வெள்ளி செலவிடப்படுவதாக கூறிய அவர், மாநிலத்திலுள்ள ஊராட்சி மன்றங்கள் மற்றும் மலேசிய உணவு வங்கி வாரியம் ஆகிய தரப்பினரின் கூட்டு முயற்சியில் இத்திட்டம் நிறைவேற்றப்படுவதாகச் சொன்னார்.

இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் இந்த உணவு விநியோகத் திட்டத்தை தொடக்கி வைத்தப்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இத்திட்டம் தொடக்கப்படுவதன் அடையாளமாக 34 பேருக்கு உணவுப் பொட்டலங்களை அவர் வழங்கினார்.

இந்த நிகழ்வில் அவர் மக்கள் வீடமைப்புத் திட்ட குடியிருப்பாளர்களின் பிரதிநிதிகளிடம் 99 ஸ்பீட்மார்ட் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கான பற்றுச் சீட்டுகளையும் ஒப்படைத்தார்.


Pengarang :