ALAM SEKITAR & CUACANATIONAL

மே மாதம் வரை இடியுடன் கூடிய கனத்த மழை- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

ஷா ஆலம், ஏப் 3– கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கிய பருவமழை மாற்றத்தின் காரணமாக தீபகற்ப மலேசியாவின் மேற்கு கரை மற்றும் உட்புற பகுதி, மேற்கு சபா, மேற்கு மற்றும் மத்திய சரவா ஆகிய பகுதிகளில் பலத்தக் காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்யும் வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையின் மாற்றத்தினால் வரும் மே மாதம் மத்திய பகுதி வரை இந்நிலை நீடிக்கும் என்று அது கூறியது.

தேசிய பருவநிலை மாற்ற மையத்தின் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான வானிலை தொடர்பான கணிப்பின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்படுவதாக அத்துறை  அறிக்கை ஒன்றில் கூறியது.

இந்த பருவமழை மாற்றத்தின் போது பல்வேறு திசைகளிலிருந்து வரும் காற்று பலவீனமடைந்து புயல் உண்டாக க்கூடிய சூழலை உருவாக்கும். இதன் காரணமாக மாலை மற்றும் இரவு வேளைகளில் குறுகிய  நேரத்திற்கு பலத்த காற்றுடன் கூடிய அடை மழை பெய்யும்.

இந்த பருவநிலை காரணமாக ஆங்காங்கே திடீர் வெள்ளம் ஏற்படும் என்பதோடு வலுவற்ற கட்டுமானங்களுக்கும் சேதம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், மே மாதம் மத்தியிலிருந்து செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவ மழை காரணமாக நாட்டின் பருவநிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இக்காலக்கட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை குறைந்து காணப்படும். பல மாநிலங்களில் தொடர்ச்சியாக பல தினங்களுக்கு மழை இருக்காது என வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.


Pengarang :