SELANGORYB ACTIVITIES

அனுமதியின்றி ஆலயங்களை விரிவாக்கம் செய்யாதீர்- கணபதிராவ் வலியறுத்து

ஷா ஆலம், ஏப் 3– ஊராட்சி மன்றங்களின் அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்களில் சீரமைப்பு அல்லது விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று ஆலய நிர்வாகங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

ஆலயங்களில் புரனமைப்புப் மற்றும் கட்டிட விரிவாக்கப்பணிகள் யாவும் ஊராட்சி மன்றங்களில் வரையறை மற்றும் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டே மேற்கொள்ளப் படவேண்டும் என்று பரிவுமிக்க அரசாங்கத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.

புதிய ஆலய நிர்மாணிப்புக்காக பல நிலங்களை நாங்கள் முறையாக அங்கீகரித்துள்ளோம். எனினும், அங்கீகாரம் கிடைத்தவுடன் நிர்ணயிக்கப் பட்டதைக் காட்டிலும் வேறு விதமாக நிர்மாணிப்புப் பணிகளை ஆலய நிர்வாகத்தினர் மேற்கொள்வது தொடர்பான புகார்கள் எனது கவனத்திற்கு வந்தவண்ணம் உள்ளன என்றார் அவர்.

அதே போல், நடப்பிலுள்ள ஆலயங்களை புனரமைப்பு செய்யும் போதும் ஊராட்சி மன்றங்களின் சட்டதிட்டங்கள் மதிக்கப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள அரசு தலைமைச் செயலகத்தின் ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற சிலாங்கூரிலுள்ள ஆலயங்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்வுக்கு தலைமை தாங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆலயங்களை அரசியல் களமாக மாற்றாமல் அவை வழிபாட்டு மையங்களாக மட்டுமே செயல்படுவதை உறுதி செய்யும்படி அனைத்துத் தரப்பினரையும் கணபதிராவ் கேட்டுக் கொண்டார்.

ஆலயங்கள் எப்போதும் அரசியல் எல்லைக்கு அப்பாற்பட்டு இருப்பதை உறுதி செய்வோம். நமது இறை நம்பிக்கைக்கு ஏற்ப வழிபாடுகளை மிதமான அளவில் மேற்கொள்வோம் என அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :