NATIONALSAINS & INOVASISELANGOR

நீர் விநியோகத் தடையை சமாளிக்க ஆயர் சிலாங்கூர்- மலாயா பல்கலைக்கழகம் ஒத்துழைப்பு

கோலாலம்பூர், ஏப் 3– நீர் வளங்களை பாதுகாப்பது தொடர்பில் கூட்டாக ஆய்வு மேற்கொள்வது மீதான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ஆயர் சிலாங்கூர் நிறுவனமும் மலாயா பல்கலைக்கழகமும் கையெழுத்திட்டுள்ளன.

மலாயா பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்து அதன் துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது ஹம்டி அப்துல் சுக்கோரும் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைமை செயல் முறை அதிகாரி சுஹாய்மி கமாருள்ஸமானும் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் வழி மலாயா பல்கலைக்கழகம் பல்வேறு ஆராய்ச்சிகளின் வாயிலாக தன் வசமுள்ள நிபுணத்துவத்தை ஆயர் சிலாங்கூர் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளும் என்று முகமது ஹம்டி கூறினார்.

நீர் வளங்களின் நீடித்த பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அந்த பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிகள் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திற்கு பெரும் துணையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீர் மாசுபடுவதற்கான காரணம், அதற்கு தீர்வு காணும் வழிகள், நீர் விநியோகத் தடையினால் ஏற்படும் விளைவுகள் உள்ளிட்ட அம்சங்களை அந்த ஆராய்ச்சி மையமிட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஆயர் சிலாங்கூர் நிறுவன தலைமை செயல் முறை அதிகாரி சுஹாய்மி, 84 லட்சம் குடியிருப்பாளர்களுக்குத் தேவையான நீரை விநியோகிப்பதற்கு ஏதுவாக நீர் வளங்களை பாதுகாப்பது தொடர்பான திட்டங்களை அமல்படுத்த இவ்விரு தரப்புக்கும் இடையிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும் எனக் கூறினார்.


Pengarang :