ECONOMYSELANGOR

கோவிட்-19 தடுப்பூசி கொள்முதல் தொடர்பில்  மே மாதத்திற்குள் இறுதி முடிவு

ஷா ஆலம், ஏப் 4-  எந்த வகை கோவிட்-19 தடுப்பூசியை கொள்முதல் செய்வது என்பது தொடர்பான இறுதி முடிவை சிலாங்கூர் மாநில அரசு வரும் மே மாதத்திற்குள் எடுக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் விரிவான அளவில் தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

வரும் ஜூன் மாதம் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதற்கு ஏதுவாக எந்த தடுப்பூசியைத் தேர்ந்தெடுப்பது என்பது தொடர்பில் வரும்  மே மாதத்திற்குள் இறுதி முடிவை எடுக்கவிருக்கிறோம். தடுப்பூசி கிடைத்தவுடன் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் அமலாக்கத்தை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றார் அவர்.

இங்குள்ள டி பல்மா தங்கும் விடுதியில் 4பி இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களின் ஆண்டு பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மத்திய அரசு அளிப்பாணை அளித்துள்ள ஐந்து வகை தடுப்பூசிகளின் மீது  சிலாங்கூர்  மாநில அரசு ஆய்வு மேற்கொண்டு வருவதாக மந்திரி புசார் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

அந்த ஆய்வுக்குப் பின்னர் பொருத்தமானது என கருதப்படும் ஒரு வகை தடுப்பூசியை மாநில அரசு கொள்முதல் செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக மாநில அரசு சொந்தமாக தடுப்பூசியை கொள்முதல் செய்ய பத்து கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.


Pengarang :