ECONOMYNATIONALPBT

கோவிட்-19 எண்ணிக்கை அதிகரிக்கும் இடங்களில் மீண்டும் இலவச பரிசோதனை

பாங்கி, ஏப் 4- இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் மீண்டும் நோய்ப்பரவல் அதிகரிப்பது கண்டு பிடிக்கப்பட்டல் அதே இடத்தில் மறுபடியும் பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படும்.

பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள முக்கிம் டாமன்சாரா இத்தகைய மறு பரிசோதனை இயக்கத்தை மேற்கொள்ளப்பட வேண்டிய இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக பரிசோதனை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஹட்ரி ஹக்கிம் கூறினார்.

அப்பகுதியில் மறுபடியும் இலவச பரிசோதனை இயக்கத்தை மேற்கொள்ள நாங்கள் திட்டமிட்டுள்ளோம். எனினும், சிலாங்கூர் மாநில கோவிட்-19 பணிக்குழுவின் ஆய்வின் முடிவைப் பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 இலவச பரிசோதனை இயக்கம் வாரந்தோறும் நடத்தப்படுவதால் ரமலான் மாதத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச பரிசோதனையை நடத்த முடியும் என தாங்கள் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று அம்பாங்கிலும் பாங்கியிலும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கங்களை நடத்துகிறோம். இவ்விரு இடங்களிலும் கிட்டத்தட்ட 10,000 பேர் பங்கு கொண்டுள்ளனர். அடுத்த வாரம் மேற்கொள்ளப்படவிருக்கும் மேலும் நான்கு பரிசோதனை இயக்கங்களின் வாயிலாக இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றார் அவர்.

இவ்வாண்டு இறுதிக்குள் மாநிலம் முழுவதும் சுமார் ஐம்பாயிரம் பேருக்கு இலவச கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ள இலக்கு வகுத்துள்ள மாநில அரசு இந்நோக்கத்திற்காக 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.


Pengarang :