ECONOMYNATIONALSELANGOR

இலவச கோவிட்-19 பரிசோதனையின் வழி பயன்பெறுவீர்- டாக்டர் மரியா வேண்டுகோள்

ஷா ஆலம், ஏப் 5– நோய்த் தாக்கம் அதிகம் கொண்ட மற்றும்  ஜனநெரிசல்மிக்க பகுதிகளில்  வசிக்கும் சிலாங்கூர் மாநில மக்கள் இலவசமாக மேற்கொள்ளப்டும் கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மாநில அரசின் இந்த இலவச பரிசோதனையில் பங்கு கொள்வோரின் எண்ணிக்கை அண்மைய காலமாக குறைந்து வருவது சமுதாயத்தில் அந்நோய் தடுப்பு மீது அலட்சியப் போக்கு ஏற்பட்டுவிட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டு விட்ட போதிலும் சமுதாயத்தின் மத்தியில் நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும் முயற்சியில் நாம் இன்னும் முழுமையான வெற்றியை அடையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினசரி குறைந்து வந்த போதிலும் அந்நோய் சமுதாயத்திலிருந்து முற்றாக துடைத்தொழிக்கப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.

பூச்சோங் பெர்மாயில் சதுக்கத்தில் கோவிட்-19 தடுப்பூசி விரிவாக்கத் திட்டத்தின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூரில் இவ்வாண்டு இறுதிக்குள்  50,000 பேருக்கு கோவிட் இலவச பரிசோதனைகளை மேற்கொள்ள இலக்கு வகுத்துள்ள  மாநில அரசு இந்நோக்கத்திற்காக 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.


Pengarang :